டிரெண்டிங்

கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் அதிகரிப்பு - முதலமைச்சர்

கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் அதிகரிப்பு - முதலமைச்சர்

webteam

கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கான நிவாரணத்தை அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் ஏராளமான மீன்வர்களின் படகுகள் சேதமடைந்தன. 

இதையடுத்து சேதமடைந்த படகுகளுக்கு ரூ.85 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு மீன்வர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஒரு படகை சரிசெய்ய 2 லட்சம் வரை செலவாகும் எனவே நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என, சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவைக்கூட்டம் தொடங்கியது. அப்போது பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கான இழப்பீடு ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

திமுக கொண்டு வந்த கஜா புயல் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். 
இதையடுத்து கஜா புயலின் போது சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிகாப்டரில் சென்றது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், சாலை மார்க்கமாக சென்றால் அனைத்து பகுதிகளையும் பார்வையிட முடியாது என்பதால் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் இயற்கை இடர்பாடுகளை சிறப்பாக கையாண்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக விரைவில் திரும்பியது எனவும் ரூ.2,301 கோடி ஒதுக்கி கஜா புயல் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.