டிரெண்டிங்

ஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக

ஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக

webteam

நாடு முழுவதும் நடைபெற்ற பாஜகவின் உறுப்பினர் சேர்ப்பின் மூலம் 3 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கான நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 6ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அன்று முதல் ஆகஸ்ட் 20 தேதி வரை நாடு முழுவதும் பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது. 

இந்நிலையில் இந்தப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியின் மூலம் புதிதாக 3 கோடிக்கு மேலானவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள குறிப்பில், “இந்தப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மூலம் பாஜகவில் புதிதாக 3,78,67,753 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் பாஜகவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 14,78,67,753 ஆக உயர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒன்றரை மாத காலளவில் அதிக பட்சமாக உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 55 லட்சம் பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அத்துடன் டெல்லியில் 15 லட்சம் பேர் பாஜகவில் புதிதாக உறுப்பினர்களாக ஆகியுள்ளனர். இந்தப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியின் மூலம் குறைந்தது 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்பது பாஜகவின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் பாஜக இந்தக் குறிக்கோளுக்கும் மேலான அளவில் உறுப்பினர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.