டிரெண்டிங்

ஸ்டெர்லைட் வரலாற்றை கட்சியின் பொய் வக்கீலிடம் கேளுங்கள் ! தமிழிசை

ஸ்டெர்லைட் வரலாற்றை கட்சியின் பொய் வக்கீலிடம் கேளுங்கள் ! தமிழிசை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 12 உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் கருத்திட்டிருந்தால் அதில் "காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ்நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா ?" என விமர்சித்திருந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்னும் கடுமையாக ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் அதில் " தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ்  சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும்  தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது" என கடுமையாக பதிவிட்டிருந்தார்.

சிதம்பரம் மற்றும் ராகுலின் கருத்துகளுக்கு பாஜக தலைவர்கள் மத்தியில் பெரும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி "ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ப.சிதம்பரமே சரியான நபர். ப.சிதம்பரம் ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர்களின் ஒருவராக இருந்துள்ளார். அது தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் குறித்து பேசியாக வேண்டும், விளக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் இன்று ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்தார் அதில் " தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஆர்எஸ்எஸ் காரணம் மோடியின் துப்பாக்கி என உளறும் ராகுல் காந்தியைக் கண்டிக்கிறோம். மக்கள் எதிர்க்கும் ஸ்டெர்லைட்  ஆலை வந்த வரலாற்றை உங்கள் கட்சியின் பொய் வக்கீல், வெளிநாட்டு சொத்தை மறைத்த ப.சிதம்பரம்த்திடம் கேட்டறிக. மக்களின் துயரம் வந்தது அன்றைய காங்கிரஸ் ஆட்சியால்" என கடுமையாக சாடியுள்ளார்.