வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்கிறது என்று எம்பி திமுக கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது கனிமொழி எம்பி உடனிருந்தார். மேலும் ஊர்வலத்தில் திமுக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், “வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாஜக செய்து வருகிறது. வேட்பாளர்களை அச்சுறுத்துவது தேர்தல் வெற்றிக்கான வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உண்மையை அறிந்தவர்கள். இதற்கெல்லாம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பயப்படப் போவதில்லை.
உண்மை நிச்சயமாக வெளிவரும். அதைத்தாண்டி தேர்தல் வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்த போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதனை ஆதரித்து வாக்களித்த அதிமுக இன்று தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக சிறுபான்மையின மக்களை ஏமாற்றி விடலாம் என்ற ஒரே காரணத்திற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக கூறுகிறது.
உண்மையிலேயே எதிர் கருத்து இருந்தால் எதிர்த்து வாக்களித்து இருக்கலாம். தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கக்கூடிய இயக்கம் திமுக. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலமாக மக்களின் கோரிக்கைகள் மனுக்களை முக.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அந்த கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றித் தருவேன். அதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எல்லா கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். எத்தனையோ முறை திமுக ஆட்சியில் இல்லாதபோது அடக்குமுறைகளை, கைது நடவடிக்கைகளை, அச்சுறுத்தல்களை, வழக்குகளை சந்தித்த இயக்கம்தான் திமுக. திமுகவின் அடித்தூண் தொண்டர்கள் தான். அவர்கள் யாரிடமும் விலை போகமாட்டார்கள். உறுதியாக நிற்கக் கூடியவர்கள் திமுகவினர்” என்றார்.