கடந்த பதிவில் கல்வித்துறை குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தோம். இப்போது விவசாயத்துறையில் பாஜக அளித்த வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேறின? எனப் பார்ப்போம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துறைக்கு அதிக முதலீடுகள் செய்யப்போவதாக தெரிவித்தது. அதன்படி விவசாயத்துறைக்கு சில முதலீடுகள் செய்பட்டன. ஆனால் அவை அனைத்தும் விவசாயிகளுக்கு பயனளிக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது. ஏனென்றால் விவாசயத்துறை ஆராய்ச்சிக்கு 0.3 சதவிகிதம்தான் அரசு முதலீடு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நீர்ப்பாசனத்திற்கு அதிக கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த 2017-18 பொருளாதார ஆய்வறிக்கையின்படி பார்த்தால் இந்தியாவில் இன்னும் 52 சதவிகித விவசாய நிலங்கள் நீர்ப்பாசனமின்றி மழைநீரையே நம்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் நீர்ப்பாசன வசதி இன்னும் பல விவசாய நிலங்களுக்கு சென்றடையவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேற்கொண்டு பாஜக, பாரம்பரிய விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்போவதாக கூறியிருந்தது. அதன்படி இயற்கை வேளாண்மைக்கு ‘பரம்பார்கட் க்ரிஷி விகாஸ் யோஜனா’என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்தால் அவர்கள் தங்களின் நிலங்களில் ஆர்கானிக் முறையில் பயிர் செய்வதற்கு சான்றிதழ் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல்கள் நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல, இயற்கை வேளாண்மை பொருட்களுக்கு அதிக விலை இருப்பதால் அது மக்களிடையே போதிய வரவேற்பை பெறுவதில்லை என்கிறார்கள் விவசாயிகள். அதனை ஒரு முக்கிய குற்றச்சாட்டாகவே முன்வைக்கின்றனர். மேலும், ‘உலக இயற்கை வேளாண்மை 2018’(world of Organic Agriculture) ஆய்வறிக்கையின்படி பார்த்தால் 2.59 சதவிகித நிலங்களில் மட்டுமே இயற்கை விவசாயம் செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பாஜக ஆட்சியில் விவசாயத்துறையில் பல நல்ல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று ‘சாயில் ஹல்த் கார்டு’(Soil Health card)திட்டம். இந்தத் திட்டம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தை பரிசோதனை செய்து, அந்த வளத்திற்கு ஏற்ப பயிருக்கான பூச்சிக்கொள்ளி மருந்துகளை அடிக்க உதவுகிறது.
அதேபோல, National Agriculutre Market(E-NAM) மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் விற்கலாம். மேலும் பயிர்க்காப்பீட்டிற்காக ‘பிரதான் மந்திரி ஃபாசல் பிமா யோஜனா’என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்து, அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு உரிய காப்பீடு பெற உதவுகிறது.
பயிர்கள் நீர்ப்பாசன வசதிக்காக மத்திய அரசு ‘பிரதான் மந்திரி க்ரிஷி சின்சாயி யோஜனா’ என்ற திட்டத்தை வகுத்துள்ளது. இதன்மூலம் பயிர்களுக்கு சிறு மற்றும் குறு நீர்ப் பாசனத்தை விவசாயிகளுக்கு அளிக்கிறது. இவ்வாறு பல நல்ல முயற்சிகளை அரசு முன்னேடுத்து இருந்தாலும் அவை இன்னும் விவசாயிகளின் நிலையை மாற்றவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த ஆட்சி காலத்தில்தான் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவில் விவசாய போரட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் வெறும் கால்களில் ரத்தம் வழிய நடந்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தப் புகைப்பட காட்சிகள் ஊடங்களில் வெளியாகி மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இத்தனை போராடங்களுக்கு நடுவில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன? வெறும் கேள்விக்குறிதான் என்கின்றனர் விவசாயிகள்.
சரி, பொருளாதரத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
(வெயிட் அண்ட் சி..)