மேற்குவங்கத்தில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் மம்தா பானர்ஜியின் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவிலுள்ள அரசு செயலகம் முன்பு கூடி 'செயலகத்திற்கு செல்வோம்' வாருங்கள் என்று கோஷமிட்டபடியே அணிவகுப்பு நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் பாஜகவின் இளைஞர் அணியின் தலைவர் தேஜஸ்வி சூர்யா கலந்துகொண்டு தலைமை தாங்கியது அவர்களுக்கு ஒரு பலத்தை சேர்த்திருக்கிறது.
அவர்களைத் தடுக்க முயற்சித்த போலீஸார் மீது கற்களை வீசியதாகக் கூறி, கண்ணீர் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் போலீஸார் கூட்டத்தை கலைத்துள்ளனர்.
தலைமை செயலகத்திற்கு அருகில்தான் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகமும் இருக்கிறது. இரண்டு நாட்களாக கொரோனா மருந்து அடிப்பதாகக் கூறி அலுவலகத்தைப் பூட்டியிருக்கின்றனர். இதனிடையே அவர்களின் போராட்டத்திற்கு பயந்துதான், மம்தா தனது அலுவலகத்தைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக, பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொற்றுநோய் காலகட்டத்தில் விதிமுறைகளை மீறி இதுபோன்ற போராட்டம் நடத்துவது பற்றி வங்கத்தின் பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியாவிடம் கேட்டபோது, பாஜகவினர் மாஸ்க் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்துத் தான் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறியிருக்கிறார்.
மேலும், விதிமுறைகள் எங்களுக்கு மட்டும்தானா? மம்தாஜி வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆயிரக்கணக்கானவர்கள் கூடியும், விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.