டிரெண்டிங்

“வீரப்பன் சகோதரரை விடுதலை செய்ய வேண்டும்” - இல.கணேசன்

webteam

சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் சகோதரரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். 

பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்தாக எதிர்கட்சிகள் பாராட்டின. ஆனால் அடுத்த நாளே குறை சொல்ல தொடங்கி விட்டானர். எதிர்கட்சிகள் அப்படித்தான் செய்வார்கள். 

பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம்; கோஷம் கூட எழுப்பலாம் ஆனால் வன்முறையில் ஈடுபடக் கூடாது. எனவே அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் நிவாரணத் தொகையை நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தினால் தான் முழு தொகையும் பயனாளிகளுக்கு கிடைக்கும்” என்றார்.

மேலும்  “திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம்.  புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்காக மத்திய அரசிடம் தமிழக பாஜக சார்பில் அறிக்கை கொடுக்க இருக்கின்றோம். ரஜினி, கமல் ,விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வர வேண்டும் என தீர்மானிப்பவர்கள் மக்கள் தான். அதிமுக தொண்டர்கள் 3 பேரை விடுதலை செய்தது பிரச்னை இல்லை. இதே போல கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதயன் போன்றவர்களும் ஆயுள் கைதிகளாக உள்ளனர். தமிழக அரசு அதனையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்

இதனைத்தொடர்ந்து கவர்னர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது என்பது வரவேற்கதக்கது. தமிழக முதல்வர் தரைவழியாக புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை இடுவதை விட ஹெலிகாப்டரில் மூலம் பார்வை இடுவது நல்லது. சேதங்கள் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரின் காரை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்க செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.