டிரெண்டிங்

“ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி” - குமாரசாமி குற்றச்சாட்டு

webteam

கர்நாடகாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை பாரதிய ஜனதா கட்சி இன்னும் கைவிடவில்லை என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்‌சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஹெச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் என்ற இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். 

இதனையடுத்து, கடந்த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், ரமேஷ் ஜர்கிஹோலி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் மற்றும் மகேஷ் குமதஹல்லி ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் 4 பேருக்கும் கட்சித் தலைமை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் பாஜக தரப்பில் அவர்களுடன் பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளியானது. அதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இரண்டு எம்.எல்.ஏக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா “ஊடகங்களில் கூறப்படுவது போன்ற சூழல் இல்லை. 4 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை பாரதிய ஜனதா கட்சி இன்னும் கைவிடவில்லை என முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்‌சாட்டியுள்ளார். தங்கள் கட்சி எம்எல்ஏ ஒருவரை பாரதிய ஜனதா பி‌ரமுகர் ஒருவர் அணுகி மிகப்பெரிய தொகையைத் தருவதாக ஆசை காட்டியதாகவும், ஆனால் அத்தொகையை வேண்டாம் என தங்கள் எம்எல்ஏ மறுத்ததுடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்ததாகவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.
 


இதற்கு “தனது அரசின் தோல்விகள் ‌மக்களின் கவனத்தை பெறுவதை தவிர்க்கவே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறுகிறார்” என்று பாஜக மாநில‌ தலைவர் எடியூரப்பா பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளார்.