டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரளாவின் மலைப்பகுதியில் உள்ள உள்ள ஒரு சிறிய நகரமான தொடுபுழா நகராட்சியில் 35 வார்டுகளில் எட்டு இடங்களை பாஜக தக்க வைத்துக்கொண்டது. இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியின் இடுக்கி மாவட்டத் தலைவர் கே.எஸ்.அஜி மகிழ்ச்சி அடைந்தார்.
"நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே எங்கள் பணியைத் தொடங்கிவிட்டோம். எங்கள் வேட்பாளர்கள் மற்றும் அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர் சமூக அமைப்பு மற்றும் சிக்கல்களை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்தோம். எங்களின் கடின உழைப்பு இருந்தபோதிலும், எங்கள் வாக்கு சதவீதம், தொடுபுழா நகராட்சியில் அப்படியே இருப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது" என்று அஜி தெரிவித்தார்.
கேரளாவில் தங்களுக்கு ஒரே ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மட்டுமே இருப்பதுதான் பாஜகவுக்கு முக்கியமான பிரச்னை. தற்போதைய கேரள சட்டப்பேரவையில் பாஜக சார்பில் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் மட்டுமே எம்.எல்.ஏவாக இருக்கிறார். கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சேர்த்து பாஜகவின் வாக்குவங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 10 சதவீதமாக இருந்தது. அதே 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 15%-க்கும் அதிகமாக உயர்ந்தது. 2020 டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கூட அது மாறவில்லை.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வாக்கு சதவீதம் (யுடிஎஃப்) 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 23.7 சதவீதத்திலிருந்து 2019 மக்களவைத் தேர்தலில் 37.46 சதவீதமாக உயர்ந்தது. தேசிய மட்டத்திலும் கேரளாவிலும் இரு கட்சிகளுக்குமான வேறுபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது மற்ற வழிகளிலும் பிரதிபலிக்கிறது. பிற மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட போட்டியாளர்களின் தலைவர்களை பாஜக வழக்கமாக தங்கள் வசம் வரவழைத்து ஆளும் கட்சியாக இருந்தால், ஆட்சியை நிலைகுலைய வைக்கவும், எதிர்க்கட்சியாக இருந்தால் கட்சியாக இருந்தால் கட்சியை காணாமல் போக வைக்கவும் செய்து வந்தது.
இதற்கு சாட்சிதான், மேற்கு வங்கத்தின் சுவேந்து ஆதிகாரி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜோதிராதித்யா சிந்தியா போன்றோர்கள். ஆனால், கேரளாவில் இதை பாஜகவால் செய்ய முடியவில்லை. ஆனால், தொடர்ந்து இதை கேரளாவிலும் பாஜக முயன்று வருகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன. ``பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் குறைந்தது இரண்டு மூத்த மாநில காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி தனக்குத் தெரியும். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சேர விரும்பவில்லை என்பது அல்ல, அதற்கு நேரம் எடுக்கும். மனநிலை மாற வேண்டும்" என்று பெயர் கூற விரும்பாத பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் Economic times-க்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார்.
இந்த முயற்சிகளுக்கு மத்தியில் இதற்கு மாற்றாக, கட்சிக்கு பல பிரபலங்கள் சமீப காலத்தில் படையெடுத்துள்ளனர். இதில் மிக முக்கியமானவர் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன். ஸ்ரீதரன் போலவே இரண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.ரவீந்திரன், வி.சிதம்பரேஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு சில தொண்டர்கள் மற்றும் கீழ் மட்ட தலைவர்கள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பிபிசிஎல் முன்னாள் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை மற்றும் பாஜகவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்.
கேரள அரசியலின் தன்மையில் ஒரு முன்னுதாரண மாற்றம் இருப்பதாக 2019-ல் பாஜகவில் சேர்ந்து ஆலப்புழாவில் இருந்து போட்டியிட்ட கேரள பொது சேவை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ``மோடி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் ஐந்து நட்சத்திர கலாசாரத்தின் ஒரு பகுதியாக இல்லாததால் அவரால் கட்சியை இங்கே கரையேற்ற முடியும். கருத்தியல் வாதங்களை நான் நம்பவில்லை. மோடி வேலையில் கவனம் செலுத்துகிறார். அவர் தலைமையின் கீழ் தொழில் வல்லுநர்கள் மட்டுமே வேலை செய்ய விரும்புகிறார்கள். தொழில் வல்லுநர்கள் வேலை செய்ய, யாராவது தேர்தலில் வெற்றி பெற்று அவர்களுக்கு அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
இவரின் பேச்சு ஏற்பவே, முதல்வராக இருக்க "தயாராக" இருப்பதாக ஸ்ரீதரன் கூறியுள்ளார். கேரள பாஜக தலைவர் சுரேந்திரனும் இவரின் பேச்சை வழிமொழிந்து இருக்கிறார். பாஜக தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளராக இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து சுட்டிக்காட்டிய கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன், "இது தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி மாதிரி" என்று ஒரு பேரணியில் கூறினார்.
அரசியல்வாதிகள் அல்லாதவர்களான ஜெய்சங்கர் ஹர்தீப் பூரி ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் மற்றும் நகர விவகார அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளில் அமர்த்திய மோடியின் நடவடிக்கை இவர்களின் நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைகிறது. எவ்வாறாயினும், அதிகாரத்தை வெல்வதற்கு கட்சிக்கு ஒரு தன்னலமற்ற அரசியல் இயந்திரம் தேவை என்பது தான் இதன் பொருள். மேலும் கேரளாவில் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் பாஜக இரண்டு நகராட்சிகளையும் 19 கிராம பஞ்சாயத்துகளையும் வென்ற போதிலும், 22,000 இடங்களில் 1,600 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. மேலும் 2,500 இடங்களில் என்.டி.ஏ வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். பஞ்சாயத்து மட்டத்தில் பாஜகவின் தேர்தல் செல்வாக்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வளரவில்லை என்று சொல்ல முடியாது; இது 2010-ல் 450 உடன் ஒப்பிடும்போது 2020-ல் 1,182 கிராம பஞ்சாயத்து இடங்களை வென்றது. ஆனால், அதன் வாக்குப் பங்கு தேக்கமடைந்து வருகிறது.
வழக்கறிஞரும் அரசியல் ஆய்வாளருமான ஜெயசங்கர் கூறுகையில், கேரள உள்ளாட்சி மன்ற வாக்கெடுப்பு முடிவுகள் வரலாற்று ரீதியாக பின்வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு நல்ல அறிகுறியைக் கொடுத்துள்ளன. "கேரளாவில் மூன்று முறை ஆட்சி (Three Tier Governance) முறை நடைமுறையில் இருந்ததிலிருந்து, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களிக்கும் நடத்தை உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் பிரதிபலிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் எல்.டி.எஃப் உள்ளாட்சித் தேர்தலை வென்றது போலவே சட்டப்பேரவைத் தேர்தலையும் வென்றது. பின்னர் 2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் வாக்காளர்கள் யுடிஎஃப்பை ஆதரித்தனர். இதன்பின் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எல்.டி.எஃப்-க்கு ஆதரவாக முடிவுகள் வந்தது. யு.டி.எஃப் அடுத்த முறை வென்றது. இப்படி ஆளும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் தான் உள்ளாட்சித் தேர்தலை வென்று சட்டப்பேரவைத் தேர்தலையும் வென்றன.
2020-ல் முதல் தடவையாக இந்தப் போக்கு உடைக்கப்பட்டு, ஆளும் கட்சி கூட்டணியாக எல்.டி.எஃப் உள்ளாட்சித் தேர்தல்களை முதல்முறையாக வென்றது. இதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வருமா அல்லது மாற்றம் நிகழுமா என்பதை ஏப்ரல் 6 சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- மலையரசு