டிரெண்டிங்

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா?

rajakannan

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சியின் தலைவர் உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சிக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், உபேந்திர குஸ்வாஹா இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உபேந்திர குஸ்வாஹா இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவினை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெறவுள்ள இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குஸ்வாஹா மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக பதவி வந்து வருகிறார். 

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டியிடுவது என்ற ஒப்பந்தம் செய்துள்ளன. மீதமுள்ள 6 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே ராஷ்ட்ரிய லோக் சக்தி கட்சிக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் 3 தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிட்டது. இந்த முறையும் உரிய இடங்களில் வழங்க வேண்டும் என்று பாஜகவை அந்தக் கட்சி வலியுறுத்தியது. இதனால், சமீப காலமாக இரு கட்சிகளிடையே முரண்பாடு நிலவி வந்தது. 

இதனையடுத்து, பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியில் குஸ்வாஹா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பாஜக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வெளியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு கட்சி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.