டிரெண்டிங்

பிஜூ ஜனதா தள் கட்சியில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு

பிஜூ ஜனதா தள் கட்சியில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு

webteam

நாடாளுமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தள் கட்சியில் பெண்களுக்கு 33% தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா பல வருடங்களாக நிலுவையில் உள்ளது. இதை நிறைவேற்றவேண்டும் என்றும் பல மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் எழுப்பிவருகின்றனர். கடந்த 2010 ஆம் மாநிலங்களவை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் அப்போது இருந்த மக்களவை நிறைவேற்றாததால் இந்த மசோதா காலாவதியானது. அதன்பின்னர் இந்த மசோதாவை மறுபடியும் கொண்டு வர பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்திவருகின்றனர். ஆனால் தற்போது நடந்த 16வது மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33% தொகுதிகள் ஒதுக்கப்படும் எனப் பிஜூ ஜனதா தள் கட்சி தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் தலைவரும் ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்னாயக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘மிஷ்ன் சக்தி’ என்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் உரையாற்றிய நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார். அதில் அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசா 33% பெண் வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும். ஒடிசா மாநில பெண்கள் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு முதலோடியாக இருப்பார்கள். இந்தியா வளர்ந்த நாடுகளை போல் ஆகவேண்டுமென்றால் அதற்கு பெண்கள் முன்னேற்றம் தான் ஒரே வழி” எனக் கூறியுள்ளார்.

அத்துடன் இந்தக் கூட்டத்தில் ஒடிசா அரசு ‘மிஷன் சக்தி’ திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கெனவே கடந்த 2018 நவம்பர் மாதம் நவீன் பட்னாயக் தலைமையிலான அரசு பெண்களுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தது. மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒடிசா அரசு பஞ்சாயத் மற்றும் நகராட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.