டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
துறைசார்ந்த செயலாளர்களாக நியமிக்கப்பட்டதில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவிக்கான விதிமுறை வருவது குறித்து எதிர் தரப்பினரின் விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், 20 பேரை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. இதனால், ஆம் ஆத்மி தலைமையிலான அரசுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த சில நாள்களில், இரட்டை ஆதாயப் பதவி என்னும் சிக்கல் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களுக்கு உருவானது. ஆம் ஆத்மி எம்.எம்.ஏ-க்களில் 20 பேர் நாடாளுமன்றச் செயலாளர்களாகப் பதவி வகித்தனர்.
எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் பாராளுமன்ற பதவி வகிப்பது சட்டபடி தவறு, அதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று பிரஷாந்த் பட்டேல் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையமும் இதுபற்றி விசாரித்து வந்தது.
இது சம்பந்தமாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் அளித்த மனுக்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றமும் எம்.எல்.ஏ-க்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனையடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்குப் பரிந்துரை செய்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தற்போது 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது.
தகுதி நீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 20 பேரும் ஜனவரி 27ஆம் தேதி வழக்கு தொடர்ந்தனர். தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு இடைக்காலத் தடை விதிக்க முதலில் மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து வந்தது. கடந்த 28ஆம் தேதி வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை இன்றைய தினத்தில் அளிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் சந்தர் சேகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு கூறியிருந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.
தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், ஆம் ஆத்மி தலைமையிலான அரசுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்து பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “இது உண்மைக்கு கிடைத்த தீர்ப்பு. டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறாக தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். டெல்லி மக்களுக்கு உயர்நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. டெல்லி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. டெல்லி மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.