டிரெண்டிங்

வன்முறை தூண்டும் பேச்சு: ஜிக்னேஷ், உமர் காலித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

வன்முறை தூண்டும் பேச்சு: ஜிக்னேஷ், உமர் காலித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

rajakannan

பீமா கோரேகான் வன்முறை சம்பவத்தில் இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, குஜராத் மாநில வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் ஆகியோர் மீது புனே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கோரேகாவ் போரின் 200வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ஜனவரி ஒன்றாம் தேதி திரளான தலித் மக்கள் திரண்டிருந்தனர். அதற்கு சில வலதுசாரி இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர். இதில், தலித் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி மகாராஷ்டிரா முழுவதும் பந்த் நடைபெற்றது. மும்பை மற்றும் புனே நகரங்கள் முற்றிலும் ஸ்தம்பித்தது.

இதனிடையே, பீமா-கோரேகான் போர் நினைவு நாளையொட்டி கடந்த டிசம்பர் 31-ம் தேதி, நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், பிரகாஷ் அம்பேத்கர், ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

இந்த நிகழ்ச்சியில் இருபிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஜிம்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அக்‌ஷ்ய பிடாட், ஆனந்த் தோன்ட் என்ற இரண்டு இளைஞர்கள் இந்தப் புகாரை அளித்தனர். ஜிக்னேஷ் மற்றும் உமர் பேசிய வீடியோ காட்சிகளையும் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் ஆகிய இருவரின் மீதும் புனே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.