பரபரப்பான அரசியல் கட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ராஜினாமா கடிதம் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் கூறிவிட்டார். அதனால், சபாநாயகர் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க உத்தரவிடும்படி மேலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மேற்கொண்டு இரண்டு எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அதனால், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நாளை வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்றும் தான் பதவி விலக மாட்டேன் என்றும் முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். நாளை மீண்டும் கர்நாடக சட்டப்பேரவை கூடவுள்ளது. மனம் மாறி காங்கிரஸ் திரும்புவதாக எம்.எல்.ஏ நாகராஜ் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று அவர் பாஜக தலைவர் உடன் மும்பை சென்றுள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, முதல்வர் குமாரசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “15க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள், இரண்டு சுயேட்சை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் பாஜகவை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.