வெறுப்பு அரசியலை அகற்றுவதற்காக அதிபர் சிறிசேன கேட்டுக் கொண்டதால் இலங்கை பிரதமராக ஒப்புக் கொண்டதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் சிறிசேன திடீரென பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு பிரதமரா? என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், இலங்கை தாண்டி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான் பிரதமராக பொறுப்பேற்றது குறித்து மஹிந்த ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வெறுப்பு அரசியலை அகற்றுவதற்காக அதிபர் சிறிசேன கேட்டுக் கொண்டதால் இலங்கை பிரதமராக ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் இலங்கையில் பொருளாதாரம் படுவீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், தன்னுடைய கட்சியின் தலைமையை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்கே ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் அரசியல் கவனித்து வருவதாக இந்தியாவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், இலங்கையில் நிலவும் அரசியல் நிகழ்வுகளை இந்தியா கவனித்து வருவதாக தெரிவித்தார். இலங்கையில் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் மதிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார். மிக நெருங்கிய நட்பு நாடு என்கிற முறையில் அதைத் தான் இந்தியா விரும்புவதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் எனவும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் உறுதியளித்தார்.