டிரெண்டிங்

திண்டுக்கல் அருகே அழகான நீர்வீழ்ச்சி... ஆனால் ஆபத்தானது...

kaleelrahman

தாண்டிக்குடி மலையில் ஆபத்தான நீர் வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். 


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சமீபகாலமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

பசுமையான சூழ்நிலை நிறைந்து இருந்தபோதும் ஆபத்துகள் நிறைந்த இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரடு முரடான பாறைகளை கடந்துதான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியும். நீர்வீழ்ச்சி விழும் இடத்தில் இருந்து சிறிது தூரம் சறுக்கினாலும் சுமார் 1200 அடி பள்ளத்தாக்கில் தான் விழ வேண்டும். 


இதுவரை இந்த பள்ளத்தாக்கில் விழுந்து 8 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாட்களில் மட்டுமில்லாமல் அனைத்து நாட்களிலும் நீர் வீழ்ச்சிக்கு வருகின்றனர். 


தற்போது தண்ணீர் குளிப்பதற்கு ஏற்ற அளவிற்கு அருவியில் கொட்டுவதால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாண்டிக்குடி போலீசார் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அருகே சோதனைச் சாவடி அமைத்து குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். உரிய பாதுகாப்புகளோடு புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.