டிரெண்டிங்

அடிப்படைகளிலேயே தவறு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள்!

அடிப்படைகளிலேயே தவறு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள்!

webteam

ஐ.பி.எல் இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கடந்த சீசனை மிக மோசமாக முடித்திருந்த சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனையும் மோசமாகவே தொடங்கியிருக்கிறது. சன்ரைசர்ஸின் இந்த தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?

அடிப்படைகளிலேயே தவறு:

டி20 போட்டிகளை பொறுத்தவரைக்கும் வெறும் 1 ரன்னே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அப்படியான சூழலில் நோ-பால்களையெல்லாம் ஃப்ரீ ஹிட்களை வாரி இறைப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுவும் சன்ரைசர்ஸை போன்று முக்கியமான கட்டத்தில் தொடர்ச்சியாக நோ-பால்களை வீசுவது ஒரு போட்டியின் வெற்றி-தோல்வியையே மாற்றிவிடும். நேற்று அதுதான் நடந்திருந்தது. பவர்ப்ளேயில் மட்டும் 4 நோ-பால்களை சன்ரைசர்ஸின் பௌலர்கள் வீசியிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் மட்டுமில்லை, ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரே நோ-பாலை வீசியிருந்தார். 'ஸ்பின்னர்கள் நோ-பால் வீசுவதெல்லாம் மிகப்பெரிய க்ரைம். கடுமையான கட்டுக்கோப்பான பயிற்சிகள் மூலமே இவற்றை சரி செய்ய முடியும்' என கமெண்ட்ரியில் லெக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனும் டேனி மோரிசனும் காட்டமாக பேசிக்கொண்டிருந்தனர். இந்த நோ-பால்கள் வெறும் ரன்களை கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. அவை கைக்கு வந்த விக்கெட்டுகளையும் உதறிவிட்டன. புவனேஷ்வர் குமார் முதல் ஓவரிலேயே பந்தை அட்டகாசமாக ஸ்விங் செய்திருப்பார். அவர் வீசிய முதல் 4 பந்துகளிலும் ஸ்விங்கை கணிக்க முடியாமல் பட்லர் Beaten ஆகியிருந்தார். 5 வது பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச்சும் ஆகியிருந்தார். ஆனால், அது ஒரு நோ-பால்! பட்லரும் மறு வாய்ப்பு கிடைத்தது. 35 ரன்களை அடித்து வெளுத்து யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அட்டகாசமான கூட்டணியை அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தே பட்லர் வெளியேறினார். பட்லர் டக் அவுட் ஆகியிருந்தால் ராஜஸ்தான் இவ்வளவு பெரிதாக 200+ ஸ்கோரை எடுத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

பௌலிங் சொதப்பல்கள்:

புவனேஷ்வர் குமார் நோ-பால்களை வீசிய போதும் தனக்கான 4 ஓவர்களில் 29 ரன்களையே கொடுத்திருந்தார். ஆனால், அவருக்கு உறுதுணையாக மற்ற பௌலர்கள் வீசியிருக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களை மட்டுமே வீசி 47 ரன்களை கொடுத்திருந்தார். எக்கானமி 15.7 சஞ்சு சாம்சன் வாஷியின் ஓவர்களில் வெளுத்தெடுத்யிருந்தார். வாஷி வழக்கமாக இவ்வளவு அதிக ரன்களை வழங்கவேமாட்டார். பெங்களூருவில் இருந்த சமயங்களில் பவர்ப்ளேயிலேயே கூட 2-3 ஓவர்களை தொடர்ந்து வீசிக்கொண்டு வந்திருக்கிறார். அப்போதுமே கூட அவரின் எக்கானமி 6-7 இந்த அளவிலேயே இருக்கும். முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுப்பார். ஆனால், இது எதுவும் நேற்று நடக்கவில்லை. நடராஜன் 4 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்திருந்தார். எக்கானமி 10.8. நடராஜனின் ட்ரேட் மார்க் யார்க்கர்கள் கடைசி ஓவரில்தான் வந்திருந்தது. அதற்கு முன்பே சில யார்க்கர்களை துல்லியமாக இறக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக வீசியிருக்க முடியும். இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சராசரியாக 145+ வேகத்தில் வீசியிருந்தார். சில பந்துகளை 150+ கி.மீ வேகத்திலும் வீசியிருந்தார். இந்த வேகத்தையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பட்லர் புவனேஷ்வரின் ஓவரில் தவறவிட்டதற்கும் சேர்த்து வைத்து துவம்சம் செய்தார். இதன் விளைவாக உம்ரான் மாலிக் 4 ஓவர்களில் 39 ரன்களை வழங்கியிருந்தார்.

புரிபடாத பௌலிங் சேஞ்ச்:

பௌலர்கள் அதிகமாக ரன்கள் வழங்கியதற்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனதற்கும் பௌலர்கள் மட்டும் காரணமில்லை. கேப்டன் கேன் வில்லியம்சனுமே அதற்கு பொறுப்பேற்றாக வேண்டும். ஏனெனில், அந்தளவுக்கு மோசமாக சில பௌலிங் மாற்றங்களக் வில்லியம்சன் செய்திருந்தார். முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் மட்டும் 5 பௌலர்களை பயன்படுத்திவிட்டார். அதில், புவனேஷ்வர் குமாருக்கு மட்டுமே 2 ஓவர்கள் கிடைத்தது. மற்ற எல்லாரும் ஒரே ஓவரோடு கட் செய்யப்பட்டனர். பவர்ப்ளேக்களில் ஒரு பௌலரை நம்பி குறைந்தபட்சம் இரண்டு ஓவர்களையாவது கொடுக்க வேண்டும். அப்போதுதான் நியுபாலில் எதையாவது முயன்று விக்கெட்டை எடுப்பார்கள். அதீதமாக ரன்களை கொடுத்து ரொம்ப மோசமாக வீசியிருந்தால் கூட ஒரே ஓவரோடு கட் செய்யலாம். ஆனால், வில்லியம்சன் சிறப்பாக வீசியிருந்த செஃப்பர்ட்டையே ஒரே ஓவரோடு கட் செய்திருந்தார். அந்த முதல் ஓவரில் செஃப்பர்ட் 5 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இத்தனைக்கும் ஒரு நோ-பாலை கூட அவர் வீசியிருக்கவில்லை. அப்படியிருந்தும் ஒரே ஓவரோடு ஓரங்கட்டப்பார். பிறகு, 7 வது ஓவரை வீசிய செஃப்பர்ட் முதல் பந்திலேயே அணிக்கு தேவையான முதல் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். விக்கெட் விழுந்த அடுத்த ஓவரே ஒரு மெயின் பௌலரை வைத்து இன்னும் அழுத்தம் கொடுக்காமல், பார்ட் டைமரான அபிஷேக் சர்மாவை வில்லியம்சன் வீச வைத்தார். இதுவும் பிரச்சனையாக அமைந்தது. அப்போதுதான் உள்ளே வந்திருந்த சாம்சன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடியாக பவுண்டரிக்களை அடித்து ரன்ரேட்டை கீழேயே விழாமல் பார்த்துக் கொண்டார். வில்லியம்சனின் இத்தகைய புரிபடாத பந்துவீச்சு மாற்றங்களும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ஒட்டுமொத்தமாக கவிழ்ந்த டாப் ஆர்டர்:

பௌலிங்கில் கடுமையாக சொதப்பி 200+ ரன்களை கொடுத்திருந்த சன்ரைசர்ஸ், பேட்டிங்கில் இன்னும் அதிகமாக சொதப்பியது. குறிப்பாக, பவர்ப்ளே 6 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வில்லியம்சன், ராகுல் திரிபாதி, பூரன் என மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். ராஜஸ்தானின் பிரசித் கிருஷ்ணாவும் ட்ரெண்ட் போல்டும் பவர்ப்ளேயில் ரொம்பவே காத்திரமாக வீசியிருந்தனர். நல்ல ஒரு குட்லெந்தை பிடித்துக் கொண்டு அதில் தொடர்ச்சியாக வீசி காரியத்தை சாதித்தனர். வில்லியம்சனின் பௌலிங் மாற்றங்கள் ஏமாற்றமளித்தது என கூறுவதற்கான காரணமும் இங்கேதான் ஒளிந்திருக்கிறது. சன்ரைசர்ஸ் பவர்ப்ளேயில் பயன்படுத்திய பௌலர்களின் எண்ணிக்கை 5. ராஜஸ்தான் பவர்ப்ளேயில் பயன்படுத்திய பௌலர்களின் எண்ணிக்கை வெறும் 2. பிரசித் கிருஷ்ணாவும் போல்ட்டும் மட்டுமே தலா 3 ஓவர்களை வீசியிருந்தனர். முக்கியமான விக்கெட்டுகளை சரித்திருந்தனர். பிரசித் கிருஷ்ணா 2 போல்ட் 8 என கட்டுக்கோப்பாகவே ரன்களையும் வழங்கியிருந்தனர். இந்த விஷயத்தில்தான் சன்ரைசர்ஸ் தடுமாறியிருந்தது. இந்த பவர்ப்ளேயிலேயே சன்ரைசர்ஸின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதன்பிறகு மார்க்ரம் வாஷிங்டன் சுந்தர் அடித்ததெல்லாம் வெறும் வாணவேடிக்கையாக இருந்ததே தவிர எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த சீசனில் விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடங்குவதை போல சன்ரைசர்ஸின் பெர்ஃபார்மென்ஸ் அமைந்திருந்தது. பௌலிங்தான் எப்போதுமே அவர்களின் பலமான அம்சமாக இருந்திருக்கிறது. இப்போது அதிலும் சொதப்பியிருக்கிறார்கள். சீசனின் தொடக்கம் என்பதால் சுதாரித்துக் கொள்ள நல்ல நேரமிருக்கிறது. விழித்துக்கொள்வார்கள் என நம்புவோமாக!

- உ.ஸ்ரீராம்