கை, கால் செயலிழந்து தவித்து வந்த ஏழைக்கு, 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சி மூலம் ஆட்டோ ஓட்டுநர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள கடற்கரை தோப்பு வலசை சிற்றூரைச் சேர்ந்த சக்திவேலுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்துவிட்டன. இதனால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் செய்வதறியாது திகைத்துப்போன சக்திவேலின் நிலைமை குறித்து புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சி மூலம் வெளியே தெரியவந்தது.
இதனைப் பார்த்த சமூக ஆர்வலரும் ஆட்டோ ஓட்டுநருமான சாகுல் ஹமீது, சக்திவேலின் குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்கம் உதவி:
பொள்ளாச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சி வாயிலாக நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் உதவி புரிந்தனர். அங்களக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோருக்கும் தொற்று பரவியது. மூன்று பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதால் வெளியில் சென்று எதுவும் வாங்கி வரமுடியாத நிலை ஏற்பட்டது.
புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சி மூலம் இதனை அறிந்த விஜயின் மக்கள் இயக்கத்தினர், சுமார் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து மாத்திரைகள், மளிகைப் பொருட்களை வாங்கி அருண்குமாரின் வீட்டிற்கே சென்று கொடுத்து உதவினர்.
கண்ணீர் கோரிக்கை:
சென்னை அம்பத்தூர் அருகே பாடியில் வசித்துவரும் பெண் ஒருவர் உண்ண உணவு, உடுத்த உடை இல்லை என கண்ணீரோடு உதவி கோரியுள்ளார். 45 வயதாகும் லக்ஷ்மி என்ற பெண் திருமணமாகாதவர். அவரும் அவரது சகோதரியும் இடிந்துவிழும் நிலையில் இருக்கும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு உண்ண உணவு, உடுத்த நல்ல உடை இல்லை என்று கண்ணீர் மல்க புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சியில் தெரிவித்து, உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவிகள் கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள். கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள். உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்.