முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் நண்பகல் 1 மணி வரை 40.73% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒரு மணிநேர நிலவரப்படி அங்குள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 40.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் உள்ள 47 தொகுதிகளில் 37.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக மேற்குவங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, கடந்தமுறையைவிட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37% வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டத் தேர்தலுக்காக 10 ஆயிரத்து 288 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளது. 30 தொகுதிகளில், 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்டத்தேர்தல் நடக்கும் 30 தொகுதிகளில், 27 தொகுதிகள் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் வசம் உள்ளன.
மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேற்கு அசாம் மற்றும் வடக்கு அசாம் பிராந்தியத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளிலும், மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வைச்சேர்ந்த 24 பேரும் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 6 பேரும் உட்பட 264 வேட்பாளர்கள் முதல்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக மொத்தம் 11,537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில், மொத்தம் 81 லட்சத்து 9 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.