மக்களவையில் பதவியேற்பின் போது ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தக்க பதிலடி கொடுத்தார்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று பதவிப் பிரமாணம் ஏற்றனர்.
அதனையடுத்து, இரண்டாவது நாளாக எம்.பிக்கள் பதவி பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பிக்கள் இன்று பதவியேற்றினர். பதவியேற்கும் போது அவர்கள் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என முழக்கமிட்டனர். இதனையடுத்து, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியை பதவியேற்க சபாநாயகர் அழைத்தார். இவர் ஹைதராபாத் தொகுதியில் நான்காவது முறையாக எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பதவியேற்க ஓவைசி வந்த போதே நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் ஜெய்ஸ்ரீராம் மற்றும் வந்தே மாதரம் என முழக்கம் எழுப்பினர். பதவியேற்ற பின்னர் அவர், ‘ஜெய்பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய்ஹிந்த்’ என்று தனது முழக்கத்தின் மூலம் பதிலடி கொடுத்தார்.