இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து செய்தியானது வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் இந்த முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டது என்றும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளதாக அவர்களது அபிமானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இவர்களின் விவாகரத்து செய்தி வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் ரஹ்மானின் பாஸிஸ்ட் மோகினி டேயின் விவாகரத்து செய்தியும் வெளியானது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு விவாகரத்திற்கு முக்கிய காரணம் பாஸிஸ்ட் மோகினிதான் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், இச்சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சாய்ரா பானுவின் வழக்கறிஞரான வந்தனா ஷா இந்த பிரச்னைக்கு குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், ”ரகுமான், சாய்ரா மற்றும் மோகினி டே, மார்க் இந்த இரண்டு விவாகரத்து அறிவிப்புகளுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. சாய்ரா பானுவும் ரஹ்மானும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த விவாகரத்து இருவருக்கும் ஒரு வேதனைக்குரிய முடிவு.
திருமண முறிவு ஏற்படும் பொழுது யாரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.. இந்த திருமணத்தில் சாய்ராபானு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார்.
இவர்களுக்குள்ளான இந்த பிரிவைப்பற்றிய உண்மையான காரணத்தைப்பற்றி விவாதிக்க எனக்கு சுதந்திரம் இல்லை. சாய்ராவுக்கு அவர் பாதுகாப்பான கணவராகவும், ரஹ்மானுக்கு சாய்ரா நல்ல மனைவியாகவும் இருந்துள்ளனர். உண்மையான காரணம் எனக்கு தெரிந்தாலும் அதை விவாதிக்க எனக்கு உரிமையில்லை. திருமண முறிவுக்குப்பிறகு இருவரும் தங்களின் நல்லதொரு வாழ்க்கையை உருவாக்க உறுதிஎடுத்துள்ளனர்.
ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் கண்ணியமான நபர்கள்... ஒவ்வொரு திருமணமும் அதன் ஏற்ற இறக்கங்களை கடந்து செல்கிறது. அது முடிவுக்கு வரும்பொழுது கண்ணியமான முறையில் இருக்கவேண்டும். அந்த வகையில் இந்த விவாகரத்து கண்ணியமான முறையில் முடிவுக்கு வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று வந்தனா ஷா கூறியுள்ளார்.