டிரெண்டிங்

டோக்கியோ ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் பங்கேற்கும் இந்திய நாயகி அபூர்வி சண்டேலா

டோக்கியோ ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் பங்கேற்கும் இந்திய நாயகி அபூர்வி சண்டேலா

jagadeesh

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய துப்பாக்கிச்சுடுதல் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் அபூர்வி சண்டேலா.

ஒலிம்பிக்கில் ஹாக்கி அல்லாத பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது ஒரே ஒரு முறை தான். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் மூலம் அந்த தங்கம் கிட்டியது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்ற அபினவ் பிந்த்ரா முதலிடம் பிடித்து தேசத்தின் தங்க மகனானார். தற்போது அதே 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிக்கிறார் அபூர்வி சண்டேலா.

28 வயதாகும் அபூர்வி சண்டேலா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்காக பயிற்சியெடுக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே சாதிக்கத் தொடங்கியவர் அபூர்வி சண்டேலா. 2012-ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் அவர். 2019-ஆம் ஆண்டு இந்தியா, ஜெர்மனி, பிரேசில் என வெவ்வேறு நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றார் அபூர்வி சண்டேலா.

இந்த வெற்றிகளால் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் சர்வதேச தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் அபூர்வி சண்டேலா ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்லும் ஆற்றலுடனேயே இருக்கிறார். இதனால் அபினவ் பிந்த்ராவை தொடர்ந்து துப்பாக்கிச்சுடுதலில் அபூர்வி சண்டேலா மற்றொரு தங்கத்தை சுட்டுத்தருவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.