டிரெண்டிங்

டிஜிட்டல் முறையில் வேட்பாளர்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் ஆப்ஸ்

டிஜிட்டல் முறையில் வேட்பாளர்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் ஆப்ஸ்

webteam

நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்ளுக்கும் வழிகாட்டும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் செயலிகள் செயல்பட்டு வருகின்றன.

களைகட்டும் நாடாளுமன்றத் தேர்தல்,களம் காணும் வேட்பாளர்கள் எனத் தேர்தல் ஜுரம் தேசம் எங்கும் பரவத்தொடங்கியுள்ள நிலையில்  தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பதற்கும்,புகார்களை தெரிவிப்பதற்கும் ‘c vijil’என்ற தனி செயலிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் விதமாக  ‘Suvidha’ என்ற செயலியும் இயங்கி வருகிறது. இந்தச் செயலிகள் அனைத்தும் நம் அன்றாடம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியவை.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேடை அமைத்து பிரச்சாரம் செய்வதற்கும், வாகனங்களை பயன்படுத்துவதற்கும், கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக்கூட்டம் நடத்துவதற்கும் Suvidha என்ற செயலியில் அனுமதி பெறவேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யும் போது, அதில் வரும் விண்ணப்பத்தில் இடம் பெற்ற தகவல்கள் உடனடியாக ஒரே நேரத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை கண்கணிப்பாளர் ஆகிய மூவருக்கும் சென்றுவிடும். அந்தத் தகவலை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் தேர்தல் அதிகாரிகள், கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பிக்கின்றனர். 

மேலும் அரசியல் கட்சிகள் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறப்பதற்கும் இதுவே நடைமுறை என்று வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் முழுமையான வழிகாட்டியாக Suvidha செயலி செயல்பாட்டு வருகிறது. மேலும் இது போன்ற செயலி செல்போனில் பதிவிறக்கம் செய்து எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறையால் அரசியல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளை நேரில் சந்தித்து அனுமதி கோரும் முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை டிஜிட்டல் முறையில் நடத்த நினைக்கும் தேர்தல் ஆணையத்திற்கு Suvidha செயலி ஒரு சிறந்த களம். ஆனால் Suvidha செயலி குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால் பிரதான கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குகூட இந்தச் செயலி குறித்த தகவல்கள் சரிவர போய் சேரவில்லை. ஆகவே இந்தச் செயலி தொடர்பான முழு விபரங்கள் குறித்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சுயேட்சை முதல் முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.