ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்த அரசு மருத்துவர் சுதா சேஷையன், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி, விளக்கமளித்தார்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக இதுவரை 9 மருத்துவர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், சுதா சேஷையனுக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில், அவர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.
ஜெயலலிதா இறந்த பிறகு அவரது உடலை பதப்படுத்தி வைக்க எம்பாமிங் செய்தது குறித்து மருத்துவர் சுதா சேஷையனிடம் நீதிபதி சில கேள்விகளை கேட்டுள்ளார். மேலும், சுதா சேஷையன் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பதால் சிகிச்சைகள் குறித்தும் மரணத்திற்குப் பிறகான நடைமுறைகள் பற்றியும் நீதிபதி கேட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மட்டுமின்றி சிகிச்சை அளிக்காத மருத்துவர்களிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார்.