டிரெண்டிங்

அனிதா மரணம் கொலையா? தற்கொலையா?: நீதி விசாரணை நடத்த கிருஷ்ணசாமி கோரிக்கை

rajakannan

மாணவி அனிதா மரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஒருவரின் கீழ் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்து அவருடைய மரணத்துக்கு காரணமான அம்சங்களை வெளிக்கொணர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் மனு அளித்திருக்கிறேன். அதேபோல் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற அந்த பள்ளி மாணவி அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாள். அதேசமயத்தில் இந்திய மருத்துவ கழகத்தால் சிபாரிசு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திலே சட்டம் இயற்றப்பட்டு உச்சநீதிமன்றத்திலே அது ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நீட் தேர்வு அமலுக்கு வந்து நீட் அடிப்படையில் நடைபெற்ற தேர்வில் 87 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ சேர்க்கைக்கான தகுதியை அவர் பெறவில்லை. எனவே நன்கு தெரிந்து அவர் இந்த தேர்வை எழுதி இருக்கிறார். 

மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை என்றால் வேளாண் படிப்புக்கு செல்வேன் என்று கூறி இருக்கிறார். அப்படிப்பட்ட அந்த மாணவி தைரியமாக இருந்த மாணவி சுப்ரீம் கோர்ட்டு வரை சென்ற மாணவி மரணம் எய்தியிருக்கிறாள், தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் என்பதை நாட்டு மக்கள் நம்ப தயாராக இல்லை. இதில் ஏதோ மிகப்பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது. 

மிக இளம் வயது அந்த பள்ளி மாணவியை கஜேந்திர பாபு என்ற நபர், அதேபோல் சிவசங்கரன் என்ற திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் டெல்லி வரை அழைத்து சென்று இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினை சந்திக்க வைத்திருக்கிறார்கள். இந்த சந்திப்புகள் எதுவுமே அந்த பள்ளி மாணவி இறக்கும் வரை வெளியே வரவில்லை. 

நீட் தேர்வை எதிர்த்து ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் சில இயக்கம் ஏழை, எளிய அனிதாவை நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தோடு கொடுத்த தேவையற்ற அழுத்தங்கள். அவரை அந்த சூழ்நிலைக்கு தள்ளியதா? அல்லது வேறு விதங்களில் அவரது மரணம் நிகழ்த்தப்பட்டதா? முறையாக அமர்வு நீதிபதியால் விசாரணை செய்யப்பட்டால் தான் அது உண்மையிலே தற்கொலையா அல்லது சிலரின் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் ஏற்பட்ட நிகழ்வா?  அல்லது கொலையா? கஜேந்திர பாபு, சிவசங்கரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே இந்த பெண்மணியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனு அளித்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.