நாம் தமிழர் கட்சி 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டிலிருந்துதான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது. அதற்கு முந்தைய 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடம் வந்தது.
2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது. 2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது. இதனிடையே 2019 உள்ளாட்சி தேர்தலில் ராஜாக்காமங்கலம் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தற்போது 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. இதில் சரிபாதி ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்தத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் தற்போது பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சீமானுக்கு 4.93% பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். மண்டலவாரியாக பார்க்கும்போது தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி 7.61% பெற்று 3வது இடத்தில் உள்ளது. மேற்கு தொகுதியில் 3.44% பெற்று 4வது இடத்தில் உள்ளது. மத்திய தொகுதியில் 5.29 சதவீதமும் வடக்கு தொகுதியில் 2.39 சதவீதமும் பெற்று 3வது இடத்தில் உள்ளது. சென்னையில் 4.46 % பெற்று 4வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்து பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் “மூன்றாவது வாய்ப்பு நாம் தமிழருக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கமல்ஹாசன் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். கட்சி தொடங்கியதிலிருந்து எல்லா வித போராட்டத்துக்கும் நாம் தமிழர் கட்சி முன்னுக்கு நிற்கிறது. தமிழ் தேசியம் பிடிக்காத, பாஜகவை பிடிக்காத வாக்காளர்களை பிரிப்பதற்காக கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இங்கு மிகப்பெரிய கவர்ச்சி அரசியல் இருக்கிறது. கமல்ஹாசன் என்னதான் இருந்தாலும் ஒரு நடிகர். அவருக்கு இருக்கும் கவர்ச்சி வேறு. சென்னையில் நாம் தமிழர்கட்சியின் பிரசாரம் மிகவும் குறைவு. களப்பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும். திமுக மீது சீமானுக்கு அதிருப்தி இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தான் வருகிறார். ஆனால் சாஃப்ட் கார்னர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்றார்.