தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டமன்ற தேர்தலுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலை காட்டிலும் இடைத்தேர்தலுக்கே திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் அளித்தன. திமுக 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நேரடியாக ஆட்சியை பிடித்துவிடும். அதிமுக ஆட்சியை தக்கவைக்க 4 தொகுதிகளை நிச்சயம் கைப்பற்ற வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதில், சில இடங்களில் திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதில், சில தொகுதிகளில் அமமுக பெற்றுள்ள வாக்குகள் அதிமுகவின் வெற்றியை பாதித்துள்ளதாக தெரிகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன் 85,376 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 82,964 வாக்குகள் பெற்றுள்ளனர். 2,412 வாக்குகள் தான் வித்தியாசம். அமமுக வேட்பாளர் 31,152 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் 71,371 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 52,653 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 18,718 வாக்குகள். அமமுக வேட்பாளர் 27,500 வாக்குகள் பெற்றுள்ளார்.
சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெறும் 456 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் அமமுக 12,511 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக தொடர்ந்து இழுபறியில் இருக்க அமமுக பெற்ற வாக்குகள் காரணமாக இருந்தது.
பெரிய குளம் தொகுதியில் திமுக 55,259 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதிமுக 41,548 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 13,711 வாக்குகள். இங்கு, அமமுக வேட்பாளர் 16,322 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், சட்டப்பேரவை தேர்தலில் சில இடங்களில் அமமுக 4வது மற்றும் 5வது இடங்களுக்கு செல்லும் அளவிற்கு பின் தங்கியது குறிப்பிடத்தக்கது.