திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திருவாரூர் தொகுதி காலியானது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து அவர் பதவி வகித்த திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானது.
இதனையடுத்து, திரூவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமுமுக இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
இந்நிலையில், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதை வைத்து வெற்றி பெறுவோம். சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்து அறிவிப்போம். உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” என்றார்.