டிரெண்டிங்

ஊழலில் முதலிடம் எடியூரப்பா அரசுக்கு தான்: டங் சிலிப் ஆன அமித்ஷா

rajakannan

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பாஜக தலைவர் அமித்ஷா கூறினர். 

கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அப்போது, “ஊழல் மலிந்த ஆட்சிக்கு போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும்” என்று கூறினார் . அப்பொழுது அமித்ஷாவுக்கு அருகில்தான் எடியூரப்பா உட்கார்ந்திருந்தார். அமித்ஷா கூறியதை கேட்டதும் அவர் ஷாக் ஆகிவிட்டார். அமித்ஷாவுக்கு அருகில் இருந்த மற்றொரு தலைவர் உடனடியாக அவருக்கு தவறை சுட்டுக் காட்டினார். சுதாகரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக மாற்றிக் கொண்டு காங்கிரஸ் அரசு என்று கூறினார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சு உடனடியாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. பலரும் இதனை பகிர்ந்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் அதிக வேகமாக ஷேர் செய்தனர். முதலமைச்சர் சித்தராமையாவும் இதனை விட்டுவைக்கவில்லை. அமித்ஷா பேசிய வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பொய்யை மட்டுமே பேசிவரும் அமித்ஷா இறுதியாக இன்று உண்மையை பேசிவிட்டார். நன்றி அமித்ஷா’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

கர்நாடக மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 12ல் தேர்தலும் 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.