டிரெண்டிங்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி... தொட்டு தூக்க மறுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி... தொட்டு தூக்க மறுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

webteam

சீர்காழி அருகே கொரோனா பாதிக்கபட்ட மூதாட்டியை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தூக்காமல் அவரது குடும்பத்தினரே தூக்கி வந்து வாகனத்தில் ஏற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆலஞ்சேரி தெற்கு தெருவில் வசிக்கும் மூதாட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கீழே விழுந்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் சீர்காழி அரசு மருத்துவனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீடு திரும்பும் போது கொரோனா பரிசோதனை செய்யபட்டது. அதன் முடிவு இன்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்த பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட மூதாட்டியை தூக்காமல் அவரது குடும்பத்தினரை விட்டே தூக்கி வர சொல்லி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். பாதுகாப்பு உடை அணிந்து வந்த பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவரை தொட்டு தூக்காமல் அவரது வீட்டில் உள்ளவர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூக்கி வர சொன்னது ஆலஞ்சேரி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளனர். மேலும் கிராம மக்கள் நலன் கருதி அந்த கிராமம் முழுவதும் கிருமிநாசினி ,பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.