டிரெண்டிங்

பெரியார், லெனினை தொடர்ந்து அம்பேத்கர் சிலையும் உடைப்பு!

பெரியார், லெனினை தொடர்ந்து அம்பேத்கர் சிலையும் உடைப்பு!

webteam

உத்தரப்பிரதேசத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். 

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது, அங்கு கலவரத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து ஹெச்.ராஜா முகநூலில் வெளியாகியிருந்த பதிவில், லெனின் சிலையைப் போல், நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, நேற்றிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக உள்ளிட்ட கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் லெனின், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனங்களை தெரிவித்தனர். 

இந்தச் சம்பவங்களில் சர்ச்சை தேசிய அளவில் உருவெடுத்துள்ளதற்கு இடையில், உத்தரப்பிரதேசம் மீரட்டிலுள்ள மவானா என்ற பகுதியில் அமைந்திருக்கும் அம்பேத்கர் சிலை நேற்றிரவு உடைக்கப்பட்டது. இதனை அறிந்த தலித் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து வந்த மாவட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையி‌னரும், உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். லெனின், பெரியார், மேற்குவங்கத்தில் சியாமா பிரசாத் முகர்ஜி சிலைகளைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.