சைக்கிள் சின்னத்தை தங்கள் கட்சியின் பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என தமாகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா.வின் தஞ்சை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், அதை தங்கள் கட்சியின் பொதுச்சின்னமாக ஒதுக்க உத்தரவிடக்கோரி த.மா.கா மூத்த தலைவரும், வழக்கறிஞருமான ஞானதேசிகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். அதில், தங்கள் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்ததால் சின்னம் பறிபோனதாகவும், தங்களின் வாக்கு சதவிகிதம் குறைந்ததால் திரும்பப் பெறப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் சைக்கிள் சின்னத்தை தங்கள் கட்சியின் பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என தமாகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 1996-ஆம் ஆண்டு, ஜிகே மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் இணைந்து சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. மூப்பனாரின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் ஜிகே வாசன், தங்கள் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடிவெடுத்ததால், சைக்கிள் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ஜி.கே வாசன், மீண்டும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, தங்களுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது.
எனவே, அந்த உத்தரவை எதிர்த்து 2016-ஆம் ஆண்டு ஜிகே வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாசனின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.