பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துகிறார் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார். ஆனால், அசாம் மற்றும் மேற்கு வங்க தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக களமிறங்க உள்ளது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சி. ஏன் இந்த முரண்? - சற்றே விரிவாக தெரிந்து கொள்வோம்.
பீகாரில் கடந்தாண்டு நடந்த பேரவைத் தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து களமிறங்கின. இதில் பாஜக 74 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வென்றன. தாங்கள் அதிக இடங்களில் வென்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக ஏற்றுக்கொண்டது பாஜக. இது பாஜகவின் அரசியல் வியூகமாக பார்க்கப்பட்டது. எனினும் பீகாரில் தங்கள் பிடி தளர்ந்துவிட்டதை ஐக்கிய ஜனதா தள கட்சியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்தச் சூழலில் அக்கட்சியினருக்கு மேலும் ஓர் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அருணாசலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜகவுக்கு தாவினர். பீகாரில் கூட்டணியில் இருந்துகொண்டே அருணாச்சலில் தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை இழுத்த பாஜகவின் செயல் நிதீஷ் கட்சிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தப் பின்னணியில்தான் மேற்கு வங்கம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக போட்டியிடப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் நிதீஷ் குமார். பாரதிய ஜனதா கட்சிக்கு தங்களது பலத்தை புரியவைக்கவும் கவலையில் இருக்கும் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இந்த 2 மாநில தேர்தல்களை ஒரு வாய்ப்பாக நிதீஷ் குமார் பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலும், தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதும் நிதீஷ் குமாரின் இந்த வியூகத்தின் பின்னணியில் இருக்கும் மற்றொரு காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். நிதீஷ் குமார் போடும் அரசியல் கணக்கிற்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண் என்ன என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.