உத்தர பிரதேசத்தில் உள்ள, அலகாபாத் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படுகிறது என்ற தகவலை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி செய்துள்ளார்.
அலகாபாத் மாவட்டத்தில், கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடத்திற்கு, 'பிரயக்' என, பெயர். இது வரலாற்று ரீதியாக மிகவும் பழமையான பெயராகும். இது முக்கியமான ஆன்மீக தளமாக திகழ்கிறது. பிரயக் என்ற பெயர் 1575ம் ஆண்டு அக்பரால் இல்லாபாத் என்று மாற்றப்பட்டது. கடந்த 443 ஆண்டுகளாக அலகாபாத் என்ற பெயரே இருந்து வருகிறது.
இந்நிலையில், அலகாபாத் என்ற பெயரை, 'பிரயக்ராஜ்' என மாற்ற, உத்தரபிரதேச அரசு திட்டமிட்டு உள்ளது. பிரயக் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, 2019ம் ஆண்டு வருகிறது. இந்தக் கும்பமேளாவை முன்னிட்டு அலகாபாதிற்கு பதிலாக பிரயக்ராஜ் என பெயரிட்டு, பேனர் அடிக்கப்பட உள்ளதாக ,தகவல்கள் வெளியாகி உள்ளன.
அலகாபாத் என்ற பெயர் பிரயக்ராஜ் என்று மாற்றப்படுவதை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக, பெயர் மாற்றம் குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு துணை முதல்வர், கேசவ் பிரசாத் மவுர்யா கூறியிருந்தார். இருப்பினும், இந்தப் பெயர் மாற்றத்திற்கு உள்ளூர் மக்கள் மத்தியில் எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திர நரன் மத்தூர் கூறுகையில், “அலகாபாத் என்பது பிரயாக் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், இந்தப் பெயர் மாற்றம் நிறைய பிரச்னைகளை கொண்டு வரும். ஏனெனில், 400 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் லாபத்திற்காக வரலாற்றை சிதைக்கக் கூடாது” என்றார்.
ஏற்கனவே, டெல்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலையின் பெயர் மாற்றப்பட்ட போதும் சர்ச்சை எழுந்தது. இருப்பினும், அந்தச் சாலைக்கு அப்துல் கலாம் என பெயர் மாற்றப்பட்டதால் சர்ச்சைகள் பெரிதாகவில்லை.
இது ஒருபுறம் இருக்க, இந்தப் பெயர் மாற்றங்களை எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் 2014ம் ஆண்டு மே 28ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “அகமதாபாத் என்ற பெயரை கர்ணாவதி என்றும், ஒளரங்கசீப் சாலையின் என்ற பெயரை தாரா ஷிகோவ் என்றும் அலகாபாத் பெயரை பிரயாக் என்றும் மாற்றுவது இனி அரசுக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அலகாபாத் என்ற பெயரை பிரயக் என்று மாற்ற வேண்டும் என்று ஓராண்டிற்கு முன்பு அகில பாரதிய அக்சரா பரிஷத் அமைப்பினர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் நேரில் வலியுறுத்தி இருந்தனர்.