நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரபலம், பணபலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து போட்டியிடத் துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட்ட வார்டுகளில் வெற்றி பெற்றதாய் நினைத்து மக்கள் பணியை தொடருங்கள். உங்களை வெற்றிபெற செய்யாததை நினைத்து மக்கள் வருந்தும் அளவுக்கு செயலாற்றுங்கள்.
மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்பது சம்பிரதாயமான வார்த்தை, அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாக சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள் என்பதற்கு வரலாறு நெடுக உதாரணங்கள் உண்டு. எங்களைப்போன்ற நேர்மையாளர்கள், அரசியலை பணம் குவிக்கும் தொழில் வாய்ப்பாக கருதாதவர்களை, வாக்குறுதி தந்து விட்டு ஏமாற்றுபவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தை சீரமைக்க நினைப்பவர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.
எங்களை போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பது வரலாறு நமக்கு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டவசமான உண்மை" எனத் தெரிவித்துள்ளார்