டிரெண்டிங்

பட்டாசு வெடித்த மக்கள்.. நீதியை நிலைநாட்டியதில் மகிழ்ச்சி என பென்னிக்ஸ் சகோதரி கருத்து

பட்டாசு வெடித்த மக்கள்.. நீதியை நிலைநாட்டியதில் மகிழ்ச்சி என பென்னிக்ஸ் சகோதரி கருத்து

webteam

நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியதில் மகிழ்ச்சி எனவும், குற்றம்செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சாத்தான்குளம் பென்னிக்ஸின் சகோதரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சாத்தான்குளத்தில் எஸ்.ஐ-யாக இருந்த ரகு கணேஷை கைது செய்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த சாத்தான்குளம் அருகிலுள்ள நெடுங்குளத்தில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

உயிரிழந்த ஜெயராஜின் மகளும், பென்னிக்ஸின் சகோதரியுமான செல்வராணி புதிய தலைமுறையிடம் பேசிய போது, “உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியதில் மகிழ்ச்சி. இந்த வழக்கில் மேலும் பலர் உள்ளனர். அவர்களையும் கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மொத்தம் 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மீது இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.