டிரெண்டிங்

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில் ஒரேமாதிரியான வாக்குறுதிகள் என்னென்ன?

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில் ஒரேமாதிரியான வாக்குறுதிகள் என்னென்ன?

webteam

அதிமுக மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒரே மாதிரியான வாக்குறுதிகள் குறித்த ஒப்பீட்டை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு பிரதமான திராவிடக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். இந்த இரு அறிக்கைகளும் தற்போது பேசு பொருளாகி உள்ளன. காரணம், இருகட்சிகளின் அறிக்கைகளிலும் ஒரே மாதிரியான பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

1. திமுகவின் தேர்தல் அறிக்கையில், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 4ஜி, 5ஜி மாதம் 10 ஜிபி டேட்டா பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் டேப்லெட் அரசு செலவில் வழங்கப்படும், அனைத்து கல்வி நிலையங்களிலும் வைபை வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும், உயர்கல்வி மற்றும் இளைஞர் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். அரசுப்பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

2. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ் போன்ற தேர்வுகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கும் பயிற்சியளிப்பதற்கான மையங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்த நிலையில், அதே போல UPSC, NEET, IIT-JEE, TNPSC ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் என்று அதிமுக உறுதி அளித்துள்ளது.

3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று திமுக அறிவித்த நிலையில், அதிமுக அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து நிலை பள்ளி மாணவர்களுக்கும் நாள்தோறும் 200 மில்லி பால் அல்லது பால் பவுடர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

4. பெண் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தி வழங்கப்படும் என இருகட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

5. அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா வசதி செய்து தரப்படும் என்று திமுகவும், மகளிர்க்கு பேருந்து கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என்று அதிமுகவும் அறிவித்திருக்கின்றன.

6. குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று திமுகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி என்றும் வழங்கப்படும் என அதிமுகவும் உறுதி அளித்துள்ளன.

7. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி தந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

8. மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று இருகட்சிகளும் அறிவித்துள்ளன.

9. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும் என்று இருகட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி தரப்பட்டுள்ளன.

10. மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், ஒரு சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று திமுக உறுதி அளித்த நிலையில், ஒரு வீட்டுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்திருக்கிறது.

11. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருகட்சிகளும் அறிவித்துள்ளன.

12. ஊடகவியலாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என திமுகவும், பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்படும் என அதிமுகவும் உறுதி அளித்துள்ளன.

13. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று திமுக, அதிமுக இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன

இவை தவிர்த்து இரு கட்சிகளும் தனித்துவம் வாய்ந்த சில வாக்குறுதிகளை அளித்துள்ளன.

அதிமுக :

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். பெண்களின் பணிச் சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

திமுக:

அனைத்து காவலர்களுக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும். மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுக அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.