மதுரை கப்பலூரில் நடைபெறும் முப்பெரும் விழா குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணி அதிருப்தி தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் டிடிவி தரப்பு இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரிய நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியை கொண்டாடும்பொருட்டு மதுரையில் உள்ள கப்பலூரில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்நிலையில் முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், " இரட்டை இலை மீட்பு.. மாபெரும் கொண்டாட்டமாம். முப்பெரும் விழாவாம். கட்சி கொடி ஏற்றுவார்களாம். யாருக்கும் அழைப்பு இல்லை. தகவலும் இல்லை. தலைவர்கள் உட்பட. மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல" என கூறியுள்ளார். இது இரட்டை இலை சின்னம் கிடைத்திருந்தாலும் கூட அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே மனக்கசப்பு இருப்பதை காட்டுவதாக உள்ளது.
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.