டிரெண்டிங்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு டிடிவி தினகரன் - திவாகரன் சந்திப்பு

நீண்ட இடைவேளைக்குப் பிறகு டிடிவி தினகரன் - திவாகரன் சந்திப்பு

webteam

நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், சசிகலாவின் சகோதரரான திவாகரனும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தஞ்சாவூரில் இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், தினகரனுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார். அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளது போன்று அதிமுக சிக்கியுள்ளதாகவும், விரைவில் அதை மீட்போம் என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “பொதுச்செயலாளர் சசிகலாவின் மூத்த அண்ணனின் மனைவி காலமாகிவிட்டார். துக்க செய்தி கேட்டு அனைவரும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோரும் வருவார்கள். இதை அரசியலாக்க விரும்பவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வந்தார். வரமுடியாதவர்கள் தொலைபேசியில் அழைத்து துக்கம் விசாரிக்கின்றனர்” என்றார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், “அதிமுகவுக்கு இது ஒரு சோதனைக் காலம். மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கரவியூகத்தில் மாட்டிக்கொள்வார். அதிலிருந்து வெளிவர அவருக்கு தெரியாது. அப்போது அவரைக் காப்பாற்ற கிருஷ்ண பரமாத்மா அங்கு இருக்க மாட்டார். அந்த நிலையில் இப்போது அதிமுக இருக்கிறது. நாங்கள் இதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். கரை சேர்க்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். அவ்வப்போது சில பின்னடைவுகள் ஏற்படுகின்றன. இருந்தாலும் இந்த சோதனைகளில் இருந்து நாங்கள் மீண்டு எழுவோம். எனக்கும் தினகரனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் என் மூத்த சகோதரியின் மகன். நீர் அடித்து நீர் விலகாது. எடப்பாடி பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி செய்கிறார். ஆட்சியை நடத்துபவர்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.