டிரெண்டிங்

ஆபத்தான நிலையில் அடுக்கம் பெரியகுளம் சாலை... சுற்றுலா பயணிகளின் உயிருக்கு யார் பொறுப்பு?

ஆபத்தான நிலையில் அடுக்கம் பெரியகுளம் சாலை... சுற்றுலா பயணிகளின் உயிருக்கு யார் பொறுப்பு?

kaleelrahman

கொடைக்கானலுக்கு செல்ல மாற்றுவழி என அறிவித்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடுக்கம் பெரியகுளம் சாலையில் பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் சாலைகள் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல மாற்று வழியாக தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக பெருமாள்மலையை அடையும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையால்  சாலை அமைக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த சாலையை இம்மாத இறுதிக்குள், தமிழக முதல்வர் காணொளி காட்சிமூலம் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

 சுற்றுலா பயணிகள் பயன்படுத்த மாற்றுவழி தேவை என்றாலும், இந்த சாலையில் 30-க்கும் மேற்பட்ட இடங்கள், ஆபத்தான முறையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அடுக்கம் கிராம மக்கள் கூறுகின்றனர். இதில் குறிப்பாக கோவிலாற்று ஓடை, மற்றும் அடுக்கம் கிராமத்தை ஒட்டிய பல்வேறு சரிவான இடங்கள், பல கொண்டை ஊசி வளைவுகள், தடுப்பு சுவர்இன்றி ஆபத்தான இடமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 


இந்நிலையில் உள்ளூர் மக்கள், சாலையின் தன்மை மற்றும் இடம் தெரிந்து அந்த பகுதிகளில் கவனமாக பயணிப்பார்கள். ஆனால் சுற்றுலா பயணிகள், சாலையின் தன்மை மற்றும் இடம் தெரியாமல் அந்த பகுதிகளில் ஆபத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில், பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஏற்படுத்தி, வடகிழக்கு பருவமழைக்கு பின்னர், சுற்றுலா பயணிகள் அடுக்கம் சாலையை பயன்படுத்த அனுமதிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று, அடுக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.