அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அணிகள் இணைந்த பிறகும் இன்னும் மனங்கள் இணையவில்லை என்று கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது கட்சி சார்பில் நடத்தப்படும் விழாக்களின் பேனர் வாயிலாக நமக்கு நன்கு தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக சிறை சென்ற போது ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தார். பரதன் ராமரின் காலணிகளை வைத்து வைத்து ஆட்சி செய்ததாக ராமாயணம் கூறுகிறது. அதேபோலே ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து ஆட்சி செய்தவர் பன்னீர்செல்வம். அந்தளவுக்கு அவர் ஜெயலலிதா விசுவாசி.இதன் காரணமாகவே அவரது மறைவுக்கு பிறகு முதல்வர் நாற்காலிக்கு எந்தப் போட்டியும் இல்லாமல் தேர்வானார்.
இதற்கிடையில் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவினர் நியமித்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சசிகலாவின் மீது குற்றச்சாட்டுகளை கூறிய பன்னீர் செல்வம் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்தது, தர்மயுத்தம் நடத்தியது எல்லாம் தனி வரலாறு.
ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த போது அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளராக ஜி.ராமச்சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதும் அவருடன் ராமச்சந்திரனும் சென்றுவிட்டார். ஓபிஎஸ் - ஈபிஎஸ் என அணிகள் பிரிந்தது. அதன்பின்னர் தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளராக ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டார். கட்சியின் சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கோரினர். தேர்தல் ஆணையம் வரை சென்றனர். பிறகு அணிகள் இணைந்தன.
தற்போது தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் கட்சியிலும் ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளனர். அணிகள் இணைப்பிற்கு பின் ஜெயலலிதாவால் கட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் அந்த பொறுப்புகளில் தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. அணிகள் தான் இணைந்துள்ளன மணங்கள் இணையவில்லை என கரை வேட்டிக்காரர்கள் புலம்பி வருகிறார்கள். கட்சி சார்பில் நடத்தப்படும் விழாக்களில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பு நிர்வாகிகளின் பெயர்களை பேனர்கள், போஸ்டர்களில் தவிர்ப்பதாக அக்கட்சி தொண்டர்களே குமுறுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அதிமுக சார்பில் மாவட்ட தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தான் தற்போது புதிய சர்ச்சை தொடங்கியுள்ளது. விளையாட்டு போட்டி தொடர்பாக அதிமுக நாளிதழில் இடம்பெற்றுள்ள விளம்பரத்தில் அதிமுக கழக தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் என உள்ளது. ஐடி பிரிவில் பல நாட்களாக கோஷ்டி பூசல் நிலவி வருவதாக விவரமறிந்த கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஐடி பிரிவு கூட்டங்களில் ஒரு கோஷ்டியினர் வருவதும் மற்றவர்கள் தவிர்ப்பது வழக்கமாகி விட்டதாக கூறினார்.
இந்நிலையில் ராமச்சந்திரன் தனது முகநூல் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் “ பல முறை அழைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட மறுத்து, கட்சியின் நாளிதழில் இப்படி தலைமையை மீறி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மாநில செயலாளர் என அறிவிக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தால் இப்படி சிந்திக்க கூட நடுங்கியிருப்பார்கள். நான் இன்றும் அவர் இருப்பதைப் போலவே கட்டுப்பாடோடு செயல்படுகிறேன் ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அவர் வகுத்த கழக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதை அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே நினைக்கிறேன். பதவி வரும் போகும் ஆனால் அவர்களின் வளர்ப்பு மாறாமல் செயல்பட வேண்டும், ஏனெனில் அது தான் கட்சி, அது தான் கட்டுப்பாடு, அது தான் தலைமையின் மேல் நாம் வைத்துள்ள பற்று. ஜெயலலிதா இல்லாததால் கேட்பாரில்லாத குழந்தை போல், அனாதை போல் தோன்றுகிறது. அம்மாவின் ஆன்மாவே காப்பாற்றவேண்டும்”எனப் பதிவிட்டுள்ளார்.