காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வோம் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்தக் காலக்கெடுவின் கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சகம் தமிழ்நாடு, கர்நாடகா கருத்து வித்தியாசங்களை உச்சநீதிமன்றமே தீர்த்துவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துளார். தமிழகத்தில் தங்களை மக்கள் ராஜினாமா செய்துவிடுங்கள் என்பதாக கூறினார். அத்துடன் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால், அரசியல் சாசனம் அர்த்தமற்றதாகிவிடும் எனவும் அவர் ஆவேசமாக பேசினார்.