டிரெண்டிங்

சின்னம் தொடர்பான டிடிவி வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சின்னம் தொடர்பான டிடிவி வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

webteam

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களை வழங்க அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு மீதான வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக 7 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அக்டோபர் மாதத்திற்கு பிறகும் அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு டிடிவி தினகரன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம் ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு கூடுதல் அவகாசம் கேட்கப்படுவதாகவும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.