டிரெண்டிங்

சேகர் ரெட்டி குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என நாளேடுகளில் விளம்பரம்

சேகர் ரெட்டி குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என நாளேடுகளில் விளம்பரம்

rajakannan

தொழிலதிபர் சேகர் ரெட்டி குறித்து அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவரது தரப்பில் நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது சுமார் 34 கோடி ரூபாய் புதிய நோட்டுகள், 147 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகள், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சேகர் ரெட்டி பல்வேறு வணிகங்களை செய்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சேகர் ரெட்டி தரப்பில் நாளேடுகளில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்தாண்டு நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் சேகர் ரெட்டி வீட்டில் 12 லட்சம் ரூபாய் மட்டுமே மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் சேகர் ரெட்டி சார்ந்த சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை அனைத்தும் சட்ட ரீதியாக சம்பாதித்த பணம் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் சேகர் ரெட்டிக்கு வர்த்தக தொடர்பு இருப்பதாக உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்திகள் பரப்பப்படுவதாகவும், அதுபோன்று செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.