டிரெண்டிங்

நீதி கிடைக்கும் என நம்புகிறேன்: பிரதமருக்கு விஷால் ட்விட்டரில் கோரிக்கை!

Rasus

ஆர்.கே.நகர் தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புவதாக பிரதமரின் ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் விஷால் வேட்புமனு முதலில் நிராகரிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின் தனது மனு ஏற்கப்பட்டுவிட்டதாக விஷால் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றும், தேர்தல் களத்தில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார். ஆனால் இறுதியில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக நள்ளிரவு 11 மணியளவில் அறிவித்தார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு வேட்புமனு நிராகரிப்பட்டு, பின் ஏற்கப்பட்டு, மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி அடிக்கடி வெளியே சென்று தொலைபேசியில் பேசினார். அது ஏன் என தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில், ‘இந்தியன்’ என்ற அடிப்படையிலேயே நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்தேன். தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை கவர போட்டியிடுவதாக கூறுவது தவறு. எனது பின்னணியில் தினகரனோ, கமல்ஹாசனோ, திமுகவோ இல்லை. நான் அரசியல் கட்சி தொடங்குவேனா என்பதை மக்களே முடிவு செய்யட்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் எனது வேட்புமனுவை திட்டமிட்டே நிராகரித்துள்ளனர். வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாலேயே அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். இனிமேலாவது அவர்களை மிரட்டாமல் இருக்க தயது செய்து கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதனிடையே, ஆர்.கே.நகர் தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும் என நம்புவதாக பிரதமர், குடியரசுத் தலைவர் மாளிகையின் ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். தனது வேட்புமனு ஏற்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டது நீதிக்கு புறம்பானது எனவும் விஷால் அதில் குறிப்பிட்டுள்ளார்.