டிரெண்டிங்

அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு

webteam

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

நகைச்சுவை நடிகரான கஞ்சா கருப்புவின் இயற்பெயர் கருப்பு ராஜா. இவர் ‘பிதாமகன்’ என்ற படத்தில் கஞ்சா விற்பவராக அறிமுகமானார். அதிலிருந்து கஞ்சா கருப்பு என அழைக்கப்பட்டார். இவரின் மதுரை தமிழ்ப் பேச்சும், வெள்ளந்தி நடிப்பும் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

இவர் ‘ராம்’,‘சுப்ரமணியபுரம்’,‘சிவகாசி’,‘சண்டைக்கோழி’,‘திருப்பதி’,‘உனக்கும் எனக்கும்’, ‘தாமிரபரணி’, ‘பருத்தி வீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘நாடோடிகள்’ என்ற படத்தில் நடித்தமைக்காக கஞ்சா கருப்பு சிறந்த நகைச்சுவை நடிப்பிற்காக தனியார் தொலைக்காட்சி விருதுவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இதையடுத்து தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவராலும் பேசப்பட்டார். திரையில் பார்த்த கஞ்சா கருப்புவுக்கும் பிக்பாஸில் பார்த்த கஞ்சா கருப்புவுக்கும் நிறைய வேறுபாடு என விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பசுமைவழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.