வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று நற்பணி இயக்க நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல் கூறியுள்ளார்.
அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரண்டாவது நாளாக தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சென்னையில் இன்று சந்தித்தார்.
நேற்று மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய கமல், இரண்டாவது நாளான இன்று மற்ற 27 மாவட்டங்களைச் சேர்ந்த நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.
- ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும் தற்போது இலக்கு மாறியுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் வருவேன். முதற்கட்டமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறேன். நம் கூட்டத்தில் இன்னும் நிறைய பேர் இணைய இருக்கிறார்கள்.
- கஜானாவை நோக்கி செல்லவில்லை. மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மக்களை நோக்கிய பயணம் விரைவாகவும், வெற்றியை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். மக்களை நோக்கிய இந்த பயணம் தொடங்கி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன.
- பிதற்றலாக சுவரொட்டிகள் ஒட்டாதீர்கள். சுவரொட்டியில் எழுதப்படும் வாசகங்களை தலைமையின் அனுமதி பெற்று எழுதுங்கள், கண்ணியம் காக்கப்பட வேண்டும். கண்ணியம் காப்பதுதான் மற்றவர்களிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்தும். நாம் யாரையும் தேவையில்லாமல் சாட வேண்டாம்; நானும் திருத்திக்கொள்வேன்.
- சாதி என்ன, மதம் என்ன என்ற கேள்வி எப்பொழுதும் எழுந்தது கிடையாது. இனியும் அப்படித் தான். நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள்தான்.
- இதுவரை ரசிகர்களிடம் நீங்கள் எந்தக் கட்சி என கேட்டதில்லை, இனி கேட்பேன். இனி நீங்கள் எந்த கட்சி என்பதை கேட்டு உறுதி செய்து கொள்வேன்.