விருதுநகரில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க மாவட்ட ஆட்சியர் வரும் வழியில், மாற்றுத்திறனாளி இளைஞர் தற்காலிக பணி நியமன ஆணை வழங்க வேண்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார். அப்போது சாத்தூரை சேர்ந்த சரவணக்குமார் என்ற மாற்றுத் திறனாளி இளைஞர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் 5 வருடமாக தினக்கூலி அடிப்படையில் பல்வேறு துறைசார்ந்த வேலை செய்துவந்த நிலையில் ஊதியம் நிர்ணயம் செய்யாமல் பணியமர்த்தப்பட்டதால் கடந்த ஐந்து வருடகாலமாக முறையான ஊதியம் பெறாமல் வேலை செய்து வந்துள்ளார்.
ஊதிய நிர்ணயம் செய்யப்படாததால் தற்போது பணி வழங்கப்படவில்லை. தொடர்ந்து இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் மற்றும் துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே ஊதியம் நிர்ணயம் செய்து தற்காலிக பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் வரும் வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் இவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் மாவட்ட ஆட்சியரின் மூலம் தற்காலிக பணிநியமன ஆணை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு சென்றார். காந்தி பிறந்தநாளான இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காந்திசிலை அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.