டிரெண்டிங்

வேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்

வேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்

webteam

கோவை மக்களவைத் தொகுதியில், தகுதி வாய்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வலியுறுத்தி, கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர், வேட்பாளர்களின் தொலைபேசி எண்களை அட்டையில் எழுதி, அதனை முதுகில் கட்டிக்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் விசில் துரை என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது தொகுதி எம் பியை பலமுறை அழைத்தும் அவரது தொலைபேசி அழைப்பை எம்பி ஏற்கவில்லை என அவர் குற்றம்சாட்டுகிறார். இதனால் பொதுமக்களின் தொலைபேசி அழைப்பை ஏற்காத எம் பி, பொதுமக்களுக்காக எந்த உதவியும் செய்ய மாட்டார் என்று கூறி இந்த தேர்தலில் அனைத்து வேட்பாளர்களின் தொலைபேசி எண்களையும் ஒரு அட்டையில் எழுதி முதுகில் கட்டிக் கொண்டு கோவையை வலம் வருகிறார் விசில்துரை. 

எந்த வேட்பாளரின் திட்டமும், கருத்தும் பிடிக்கவில்லை எனில் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் என‌ விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் விசில்துரை. கோவையை வலம் வரும் இவரை ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள் ,மொபைல் போனில், வேட்பாளர்களின் தொலைபேசி எண்களையும் படம்பிடித்து சென்றனர். ஒவ்வொரு எம்.பிக்கும் சம்பளம் எவ்வளவு, தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்த விவரத்தையும் மக்களிடம் கொண்டு செல்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கோவை மக்களவை தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர். 14 பேரில் யார் நேர்மையானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். நாம் ஓட்டு போடுவதால் 60 லட்சம் சம்பளமும் 25 கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதியும் அவர்களுக்கு கொடுக்கிறோம். ஒரு முறையாவது போன் பண்ணி பேசுங்க. கண்டிப்பா போன் எடுக்கிறார்கள். நீங்கள் ஓட்டு போட வேண்டும் என யாரை நினைக்கிறைஇர்களோ அவர்களுக்காவது போன் பண்ணுங்க. தயவுசெய்து நேர்மையானவர்களுக்கு ஓட்டு போடுங்கள். தேர்தல் முடியும் வரை இந்த விழிப்புணர்வை செய்ய முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.