மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நான்கு கண்மாய்களுக்கு நீர் வழங்க வலியுறுத்தி 18 கிராம பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 18 கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது கோவிலாங்குளம் பெரிய கண்மாய், கடுக்காஞ்சி கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய், பெத்தாங்குளம் கண்மாய் என நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயிலிருத்து இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நான்கு கண்மாய்களும் வறண்டு காணப்படும் சூழலில் வரும் காலங்களில் குடிநீருக்கு கூட பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என வேதனையுடன் தெரிவிப்பதோடு கோவிலாங்குளம் கிராமத்தில் 18 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 3ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை துவங்கினர்.
இதையடுத்து அரசு தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் நேற்றிலிருந்து தேர்தல் புறக்கணிப்போடு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கண்மாய்க்கு தண்ணீர் வழங்கி தங்கள் வாழ்வாதரத்தை காக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.